கத்தார் முஷரப் பகுதியில் நிறுவனம் சம்பளம் வழங்க தாமதித்ததால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வேலை செய்த நிறுவனம் சம்பளத்தை தாமதப்படுத்தியதால் வெளிநாட்டு தொழிலாளர்கள் நேற்று  (May 22) கத்தார் முஷரப் பகுதியில் அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இது சம்பந்தமாக உடனடியாக கவனத்தில் எடுத்த நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் (ADLSA) தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அனைத்து சம்பளங்களும் வரும் நாட்களில் உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ஊதிய பாதுகாப்பு முறையை மீறியதற்காக (WPS) சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கையும்  எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் (ADLSA), அனைத்து நிறுவனங்களுக்கும், வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளம் உரிய முறையில் கால தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விதிகளை மீறும் எந்தவொரு நிறுவனத்திற்கும், கத்தார் தொழிலாளர் சட்டங்களின் படி அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சு, தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளுக்கு எதிராக வேலை தொடர்பான குறைகளைத் தெரிவிக்க 24/7 பல மொழி ஹாட்லைன் சேவையை (92727) என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்று அறிவித்துள்ளது.

Source : thepeninsulaqatar