தந்தையை கொலைசெய்தவர்களை மன்னிக்கிறோம் - சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் மகன்


சவுதியைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான  ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்களை தங்களது குடும்பம் மன்னிப்பதாக கசோக்கியின் மகன் தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு குறித்து ஜமால் கசோக்கியின்  மகன் சலா கசோக்கி தனது டுவிட்டரில் 'தியாகி ஜமால் கசோக்கியின் மகன்களான நாங்கள், எங்கள் தந்தையை கொன்றவர்களுக்கு மன்னிப்பு அளிக்கிறோம்.' என குறிப்பிட்டுள்ளார்.பத்திரிகையாளரான ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வொஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகையில்பல கட்டுரைகளை எழுதி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் 2 ஆம் திகதியன்று துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்குச் சென்ற ஜமால் கசோக்கி கொலைசெய்யப்பட்டு அவரது உடல் பாகங்களை அழித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இக் கொலை சவுதி இளவரசரின் தூண்டுதலால் இடம்பெற்றதாக தகவல்களும் வெளியாகின.

பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இப் படுகொலை தொடர்பாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில், குறித்த வழக்கை விசாரித்த சவுதி அரேபியாவின் ரியாத் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் 5 பேருக்கு எதிராக தூக்கு தண்டனையும் மூன்று பேருக்கு எதிராக 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில் அவரது மகன் சலா கசோகி மேற்கண்டவாறு டுவிட்டரில்  பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.