வளைகுடா யுத்தத்தில் இலவசமாக மீட்கப்பட்ட இந்தியர்களும், இப்போதைய மீட்புக்கு அதிக பணம்அறவிடும் அரசும்..


கொரோனா பாதிப்பினால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மூலம் தாய்நாடு அழைத்துவர அரசு பெருந்தொகையான பணம் வசூலிக்கும் இத் தருணத்தில், 1990ல் வளைகுடா யுத்தம் நடந்தபோது குவைத்திலிருந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் எந்த வித பணமும் அறவிடப்படாமல் இந்தியாவுக்கு மீட்டுவரப்பட்டனர்.

வளைகுடா யுத்தம் நடந்தபோது குவைத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றிவந்தார்கள். அந்தத் தருணத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்தது.

இந்தியர்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது என அப்போதைய அரசர் சதாம் ஹுசைன் வாக்குறுதி அளித்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் நாடு திரும்பவே விரும்பினார்கள்.

அப்போது ஏர் இந்தியாவிடம் சில 747 விமானங்களே இருந்தன. ஆகவே இந்தியன் ஏர்லைன்ஸ் அப்போதுதான் வாங்கியிருந்த ஏர்பஸ் ஏ 320களை பயன்படுத்த நினைத்தார் அப்போதைய பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்.

அந்த விமானம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தினமும் 16-18 மணி நேரம் என்ற ரீதியில் தொடர்ந்து பறந்தது. மொத்தம் 488 தடவைகள். 1,11,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர். இப்போதுவரை, உலகில் எந்த ஒரு நாடும் இவ்வளவு பெரிய அளவில் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதில்லை.

இந்த நடவடிக்கையில் பில்லியன் டாலர்கள் வரை செலவானது. அப்போது அன்னியச் செலாவணியே இல்லாத காரணத்தால், 55 டன் தங்கத்தை அடகுவைக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது..

இருந்தபோதும் இந்தியர்களை மீட்பது இந்தியாவின் கடமை என அவர் நம்பினார். அந்த மீட்பு நடவடிக்கைக்கு அவர்களிடம் பணம் கேட்பது என்ற கேள்வியே எழுந்திருக்கவில்லை அனைத்தையும் அரசே பொறுப்பெடுத்தது.