இலங்கையில் மீண்டும் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கத் தீர்மானம்


தற்போது பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை அனுமதிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்திருக்கிறது.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் இலங்கையில் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இருப்பினும் இலங்கை தொடர்பான தோற்றப்பாட்டையும், நாட்டிற்குள் உள்ளீர்க்கும் சுற்றுலாப்பயணிகளின் வரையறையையும் மாற்றியமைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே நாம் இதனைக் கருதுகின்றோம் என்று இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்வதற்கான கோரிக்கைகள் அதிகரித்திருக்கின்றன.
எமது விமானநிலையங்கள் மீளத்திறக்கப்படும் திகதி குறித்து ஜேர்மன் மற்றும் இந்திய நாடுகளின் சுற்றுலாத்துறை முகவர்கள் தொடர்ச்சியாக அக்கறை காண்பித்து வருகிறார்கள். இந்தியா, லண்டன், ஜேர்மன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கான முக்கிய சந்தைகளாக உள்ளன.
குறைந்தளவான கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் மற்றும் குறைந்தளவு மரணங்கள் பதிவாகியுள்ள இலங்கை, நீண்டகால விடுமுறையை அனுபவிக்க விரும்புபவர்களின் விருப்பத்தெரிவாக மாறியிருக்கிறது.
தற்போது பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையில், எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து நாட்டிற்குள் சுற்றுலாப்பயணிகளை அனுமதிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.  நீண்ட நாட்கள் தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகள்  எமக்கு அவசியமாகிறார்கள். எனவே 5 வருட காலத்திற்கான நீண்டகால வீசா வழங்குவதற்கும் திட்டமிட்டு வருகிறோம்.