விமான நிலையத்தை மூடி வைத்து கொள்ளையடித்தல்

 


விமான நிலையத்தை திறக்க மாட்டோம் என்பதை கிரிக்கெட்டில் உலக கிண்ணத்தை வென்றது போல் பெருமையாக சொல்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க. அவர்தான் நாட்டின் சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர்

வெளிநாட்டில் இருந்து வருவோரால் வைரஸ் தொற்று பரவும் அதனால்த்தான் நாட்டின் தேசிய விமான நிலையம் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ளது என்ற வாதம் கொஞ்சம் கொஞ்சமாக அதன் நம்பக தன்மையை இழக்க தொடங்கியுள்ளது.
பணம் உள்ளவர் வருகிறார், சீனாக்காரர் வந்து போகிறார், பெரும் நிறுவனங்கள் chatter விமானங்களில் தொழிலாளர்களை இந்தியாவில் இருந்து அழைத்துவருகிறார்கள்-இலங்கைக்குள் வர முடியாமல் இருப்பது மத்திய கிழக்கில் நிர்க்கதியாகி நிற்கும் அந்த நடுத்தர வர்க்க தொழிலாளியால் மட்டும்தான்..!
மத்திய வங்கி புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆண்டுதோறும் 6-7 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டி தருகிறார்கள். இது இலங்கை ரூபாயில் 1.3 டிரில்லியன்.
சுமார் 60000 தொழிலாளர்கள் இலங்கைக்கு திரும்ப பதிவு செய்துவிட்டு காத்திருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை சொந்த காசில் இலங்கைக்கு வரவழைத்து 15 நாட்கள் தனிமை படுத்தும் முகாம்களில் தங்க வைத்தால் கூட அரசாங்கத்துக்கு வெறும் 300 மில்லியன் ரூபாய்தான் செலவாகும் என்று ஒரு பொருளாதார நிபுணர் கணிப்பிட்டு சொன்னதை அண்மையில் படித்தேன். இந்த கணிப்பீடு கிட்டத்தட்ட சரியானதாகேவே தோன்றுகிறது.
ஆனால் அந்த தொழிலாளர்களை முழு மனதுடன் அழைத்துவர அரசாங்கம் விரும்பவில்லை. அவர்களை முழுமையாக உறிஞ்சி எடுத்த பின்னும்கூட,இந்த நெருக்கடியான நிலையில் அவர்கள் வீடு திரும்ப போதிய வசதிகளை செய்து கொடுக்க அரசாங்கம் விரும்பவில்லை என்பதை தவிர இதை வேறு வகையில் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மத்திய கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் வேலையை இழந்து, இருப்பிடத்தை விட்டு வெளியேறி, நண்பர்களின் சிறிய ரூமில் வேண்டாத விருந்தாளியாக வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொல்லொன்னா துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.
இயலாமையும்,நெருக்கடியும் மனஅழுத்தமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்கொலைகள், திடீர் மரணங்கள், என்று கவலை தரும் செய்திகள் நாள் தோறும் வருகின்றன.
ஆரம்ப நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு ஆமிக்காரன் ஆப்பிள் ஆரஞ்சு கொடுத்ததாக வந்த செய்திகள் இப்போது பெரிதாக வருவதில்லை. லட்சக்கணக்கில் பணம் கட்டி வீடு வந்து சேர்ந்தவர்கள் கூட தவிப்பின் வலியை, அந்த பயணத்துக்கான போராட்டத்தை ஒரு நீண்ட பெருமூச்சுடன் சொல்வதையே கேட்க முடிகிறது.
மக்களின் பணத்தில் இயங்கும் தேசிய விமான சேவை ஒரு நெருக்கடியை பயன்படுத்தி தன் சொந்த மக்களை சீட்டுக்குளுக்கி கொள்ளை அடிக்கும் அதிசயம் இங்கே நிகழ்கிறது.
வீடு கட்ட வெளிநாடு போனவர் வீட்டுக்கு திரும்பி வர அந்த வீட்டையே அடமானம் வைக்கும் பரிதாபத்துக்கு தள்ள பட்டிருக்கிறார் . இலங்கையில் மனைவி தன் தாலியை விற்று கட்டாரில் உள்ள கணவனுக்கு சாப்பிட பணம் அனுப்பிய ஒரு நிகழ்வை அண்மையில் வாசித்தேன். அது ஒரு சம்பவம் அல்ல. இன்றைய யதாரத்தின் பிரதிபலிப்பு..!
கொரோனவை இலங்கை அரசாங்கம் உலக தரத்தில் கையாண்டதாக ஆட்சியாளர்களின் கைக்கூலிகள் பரப்பும் புளகாங்கிதங்களுக்குள் சாதாரண மக்கள் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
உண்மை என்னவெனில்,இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கருதக்கூடிய அந்த சாதாரண தொழிலாளியை நாட்டுக்கு கொண்டுவந்து சேர்க்க எந்த முறையான திட்டமிடலும் செய்யப்படவில்லை, 6 மாதங்கள் கடந்தும்,தினசரி ஒரு விமானதில் கூட அவர்களை கொண்டுவந்து தனிமை படுத்த கூடிய ஒரு அடிப்படை திட்டம் வகுக்கப்படவில்லை.
கடற்படை கப்பல்களை கொண்டுள்ள ஒரு தீவான இலங்கை, விரும்பினால் கப்பல் மூலம் ஏராளமானோரை அழைத்து வந்து தனிமை படுத்தி இருக்க முடியும்.
கடற்பரப்பில் பண்ணநாட்டு நிறுவனத்தின் எண்ணெய் கப்பல் எரியும் போது துரித கதியில் செய்யப்பட்டு தீயணைத்து பணம் பார்க்கும் கடற்படை கப்பல்கள் எதுவும் இந்த மனித அவலத்தில் ஓரு தொழிலாளியை கூட ஏற்றிவர பயன்படுத்தப்படவில்லை.
அதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த தொழிலாளர்கள் வெளிநாடு செல்லும்போது அவர்களிடம் கட்டாய காப்புறுதி என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் அறவிடப்படுகிறது.
காப்புறுதி என்றால் என்ன, ஒரு நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாதுகாப்பு நோக்கத்தில் கட்டப்படும் முற்பணம், இந்த நேரத்தில் அந்த காப்புறுதிகளுக்கு என்ன ஆனது...!
மக்கள் சிந்திக்காமல் இருக்கவும் நியாயமான கேள்விகளை எழுப்பாமல் இருக்கவும் காலத்துக்கு காலம் ஒன்றை எடுத்து விடுவதை நிர்ணயிக்கப்பட்ட அரசறிவியல் தந்திரமாக கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், இறைச்சி இறக்குமதிக்காக விமான நிலையத்தை திறந்து, முஸ்லிம்களுக்கு பாடம் கட்பித்ததாக பிரச்சாரம் செய்தால், அதுக்கும் " ஹொந்த வெட, ஜயவேவா சே.." என்று சொல்ல ஒரு கூட்டம் இங்கே இருக்குறது...!

Copied