பொது மக்களுக்கு ஜனாதிபதியின் அறிக்கை

 COVID 19 தொற்றுநோய் உலகெங்கும் பரவி அச்சுறுத்தியபடி இருந்த ஒரு நேரத்தில் வலுவான நாடாக நாங்கள் எல்லோரும் ஒன்று திரண்டு நின்று, அதனை தோற்கடித்து வெற்றி கண்டிருந்தோம்.

ஆனால், இப்போது - எங்கோ இழைக்கப்பட்ட ஒர் அலட்சியமான தவறின் காரணமாக - COVID 19 மீண்டும் நமது நாட்டில் பரவத் தொடங்கி விட்டது.
முன்னரைப் போலவே, இந்த முறையும் - இந்த தொற்றுநோயிலிருந்து எம்மைக் காப்பாற்ற - எமது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஏனைய சேவைத் துறையினர் சிறந்த நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் - சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை, அலட்சியப்படுத்தாமல் - நேர்த்தியாகவும் - கச்சிதமாகவும் பின்பற்றுவது மட்டுமல்லாமல் -
மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் கபட நோக்கத்துடன் பல்வேறுபட்ட குழுக்களாலும் பரப்பப்படும் ஏமாற்றுப் பொய் செய்திகளால் ஆட்கொள்ளப்பட்டுவிடாமல் -
அதிகாரபூர்வ அரசாங்க தகவல் சேவைகளிலிருந்தும் ஜனாதிபதி செயலகத்திலிருந்தும் வெளியிடப்பட்டு,
பதிவு செய்யப்பட்ட வெகுசன ஊடகங்களினால் உங்களுக்குத் தரப்படும் தகவல்களை மட்டுமே உண்மை என எடுத்து,
அதற்கேற்ப செயற்படுமாறு நாட்டு மக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.