கத்தார் நாட்டுக்கெதிரான தடை மூலம் அரபு கூட்டணி சாதித்தது என்ன ?கத்தார் மீது 2017 ஜூன் மாதம் சவூதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நான்கு அரபு நாடுகள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கு கத்தார் அரசு துணை போகின்றதென்று பிரதானமான குற்றாச்சாட்டுடன் இன்னும் சில குற்றச் சாட்டுக்களை சுமத்தி பொருளாதார, வான்பரப்பு மற்றும் போக்குவரத்து போன்றவற்றிற்ற்கு தடைகளை விதித்திருந்தன.

இவ்வாறு தடைகளை ஏற்படுத்தினால், வேறுவழியின்றி கத்தார் அரசு தங்களது நிபந்தனைகளுக்கு கட்டுப்படுமென்று குறித்த நான்கு அரபு நாடுகளும் திட்டமிட்டது.

ஆனால் எதிர்பாராதவிதமாக ஈரான், துருக்கி, மொரோக்கோ உட்பட பல இஸ்லாமிய நாடுகள் கத்தாருக்கு உதவியதால் இந்த தடையினால் எதிர்பார்த்த எந்தவித இலக்கினையும் அவர்களால் அடைந்துகொள்ள முடியவுமில்லை.

சவூதி அரேபியாவின் கத்தாருக்கு எதிரான அரபு கூட்டணியில் குவைத் நாட்டையும் இணைத்துக்கொள்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சி இறுதிக் கட்டம் வரை தோல்வியையே தழுவியிருந்தது.
 
இவ்வாறான நிலையில் யெமன்  நாட்டில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியில் அங்கம்வகித்து வந்த கத்தார் அதிலிருந்து விலகியதானது சவுதிக்கு மேலும் அதிர்சியை ஏற்படுத்தியது.

மேலும் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாக தெரிவான ஜோ பைடனின் ஆட்சியில் முன்புபோல் சவூதி அரேபியாவினால் செல்வாக்கு செலுத்துவது கடினம் என்று ஊகித்ததன் காரணமாகவும், வளைகுடா பிராந்தியத்தில் ஈரானின் இராணுவ பலம் ஓங்கியுள்ள நிலையிலும் தான் தனிமைப்பட்டுவிட கூடாது என்றவகையில் சவூதி அரேபியா கத்தாருடன் உறவினை பலப்படுத்த முயற்சித்துள்ளது.

அமெரிக்காவின் அரசியலில் ஏற்பட்ட மாற்றமே கத்தார்மீதான அனைத்து தடைகளையும் சவூதி அரேபியா திடீரென விலக்கிக்கொள்வதற்கான காரணமாகும்.

கத்தாருக்கெதிரான தடை நீக்கத்தில் உடன்பாடு காணப்பட்ட விடயங்கள் வெளியே கூறப்படாவிட்டாலும், அல் – ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் மீண்டும் சவூதி அரேபியாவில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

மொத்தத்தில் நான்கு ஆண்டுகள் கத்தாருக்கெதிரான தடைவிதிப்பில் அரபு கூட்டணியினர் எதனையும் சாதிக்கவில்லை. 

முகம்மத் இக்பால்